WE NEVER SLEEP
வருடம் 1868
"அப்படியா உயில்ல எழுதியிருக்காரு?"
"ஆமா! க்ரேஸ்லாண்ட் தோட்டத்தில்( Graceland cemetery) அவர் குடும்பத்துக்கான கல்லறைக்கான
பகுதியில அந்தப் பொண்ணோட உடல் புதைக்கப்படப் போகுது. அவர்கிட்ட வேலை செஞ்ச பொண்ணுங்கிறதால குடும்பத்தைச் சேர்ந்தவள் இல்லைன்னு சொல்லி அந்த இடத்தை வேறு யாருக்கும் எந்த காலத்திலும் அவரோட வாரிசுகள் விற்க முடியாதுன்னு உயில்ல அழுத்தம் திருத்தமா எழுதியிருக்கார்.."
"மரணத்துக்குப் பின்னாடியும் அந்தப் பொண்ணோட அமைதி கெடக்கூடாதுன்னு நினைக்கிறார் போல. "
யார் அந்தப் பெண்?
யார் அந்தப் பெரிய மனிதர்?
வருடம் 1856
அந்த அலுவலகத்தின் உள்ளே நுழைந்த பெண் சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போகிறார்கள் வரவேற்பு பகுதியில் உள்ளவர்கள்.
"முடியாது " என அவர்கள் சொன்னதை அப்பெண் ஏற்க மறுக்கவே முதலாளியிடம் அழைத்து செல்கிறார்கள்.முதலாளிக்கும் அப் பெண்ணுக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. முதலாளி "ஆட்கள் வேண்டும்" என பத்திரிக்கையில் விளம்பரம் கொடுத்தது உண்மை.
ஆனால் அவர் தொழிலுக்கு ஆண்களையும் வரவேற்பு, கிளார்க் போன்ற பணிகளுக்கு பெண்களையும் கேட்டிருந்தார்.
இப் பெண்ணோ ஆண்கள் செய்யும் வேலையை தான் செய்வேன் என மல்லுக் கட்டி நின்றார். இப் பணியில் ஆண்களால் நுழையவே முடியாத இடங்களிலும் தன்னால் பணியாற்ற முடியும் என வாதித்தார்.
முதலாளியும்சாமான்யப்பட்டவரல்ல . இதை ஒத்துக் கொண்டு அவருக்கு அப் பணியை அளித்தார். நினைத்தே பார்க்க முடியாத காலகட்டம்.
இப்படியாக அமெரிக்காவின் முதல் துப்பறியும் பெண்மணியாக வரலாற்றில் இடம் பதித்து நுழைந்தார் KATE WARNE கேட்டி வார்னே
பெண்களுக்கான ஓட்டுரிமையே இந்நிகழ்வுக்கு 64 வருடங்களுக்குப் பின்னரே சாத்தியமானது எனும்போது இது பெரும் முயற்சிதான்.
சம்பவம் நடந்த இடம் சிகாகோவில் உள்ள பிங்கர்ட்டன் ஏஜன்சியின் தலைமை அலுவலகம்.முதலாளி ஆலன் பிங்கர்ட்டன்.
தனது உயிலில் கேட்டி வார்னேயின் கல்லறைத் துயில் எக்காலத்திலும் கலைக்கப்படக்கூடாது என எழுதியவர் ஆலன் பிங்கர்ட்டன்தான்.
இலினாய்ஸின் சிகாகோவில் உள்ள கிரேஸ்லாண்ட் மயானப் பகுதியில் ( Graceland cemetery - Chicago, Illinois)
NOTABLE BURIALS என்பதின் கீழ் கேட்டி வார்னேயின் பெயர் இன்றும் உள்ளது. Tombstone- னை இன்றும் நேரில் காண முடியும்.( பிங்கர்ட்டன் பேரும் இதில் உண்டு).வரலாறில் அழிக்கமுடியாத முத்திரை பதித்து சென்ற ஒரு பெண்ணை பற்றிய கதையை வெளியிட்டதன் மூலம் வெறுமனே " பெண் உளவாளி" என முத்திரை குத்தப்பட்டு பிரெஞ்சு அரசால் பலிகடா ஆக்கப்பட்ட ஒரு பெண்ணின் கதையை வெளியிட்டதன் மூலம் எடிட்டர் சாருக்கு ஏற்பட்ட வருத்தத்தை இக்கதை அறவே போக்குவதோடு டெக்ஸ் கதைகளில் ஒரு முக்கிய இடத்தையும் அளிக்கிறது. காரணங்கள் பின் வருகின்றன.
கேட்டி வார்னே பற்றி
" கட்டளைகள் பிறப்பிக்கவென்றே பிறந்தது போல் தோற்றம்,முகத்தில் நேர்மை தொனித்தது, மெல்லிய ஆனால் உறுதியான உடல்வாகு, பிரௌன் நிற கேசம்,
உடலசைவுகளில் நளினம்,அழகு என்பதை விட அறிவார்ந்த முகம், உணர்ச்சி ததும்பும் தெளிவான முகவெட்டு
- பிங்கர்ட்டன் 1883-ல் வெளியான THE SPY OF THE REBELLION நூலில்.
ஆடம்ஸ் எக்ஸ்பிரஸ் கையாடல் வழக்கு
1858-ல் ஆடம்ஸ் எக்ஸ்பிரஸ் கம்பெனியில் 50000 டாலர்கள் மாயமாக மறைந்தன. இதைத் துப்புதுலக்க பிங்கர்ட்டனை நாடினார் கம்பெனியின் அதிபர்.
(போக்குவரத்து கம்பெனியாக 1854 - ல் துவங்கி 1929 - ல் Closed end fund- equity fund என்ற முறையில் இயங்கிய இக் கம்பெனி கிரேட் டிப்ரஷனை எல்லாம் சமாளித்து இதே முறையில் ஆடம்ஸ் ஃபண்ட்ஸ் என இன்றும் இயங்கி வருகிறது.)
முக்கிய கையாடல் குற்றவாளியாக அலபாமாவைச் சேர்ந்த மரோனி சந்தேகிக்கப்பட்டபோதிலும் ஆதாரங்கள் இல்லை. மரோனியின் மனைவியுடன் நெருங்கிப் பழகி பல விஷயங்களை கிரகித்த கேட்டியின் திறமையால் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 40000 டாலர்கள் மீட்கப்பட்டன.மரோனிக்கு அலபாமா சிறையில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது.கேட்டியின் மீதான பிங்கர்ட்டனின் ஆழமான நம்பிக்கையை இச்சம்பவம் உறுதிப்படுத்தியது.
கேட்டி வார்னே அமெரிக்க சிவில் வாரின் போதும் அதற்கு பின்னரும் பல சிறிதும் பெரிதுமான சாகசங்களில் ஈடுபட்டிருந்தாலும் நமது ஒரு மாயனோடு மோதல் கதையோடு தொடர்புடைய ஒரு சம்பவத்தை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
1860 -ல் பல பெண் டிடெக்டிவ்ஸ்களை நியமித்த ஆலன் பிங்கர்ட்டன் அவர்களுக்கு மேலாளராக கேட்டியை நியமித்தார்.
பால்டிமோர் சதிவலை
1861-ல் பிலடெல்பியா - வில்மிங்டன்- பால்டிமோர் ரயில்பாதையின் அதிபர் சாமுவேல் ஃபெல்ட்டன் ஆலன் பிங்கர்ட்டனை அணுகினார் . மேரிலாண்ட் மாகாண பகுதியில் அப்போதைய அரசியல் சூழ்நிலையில் அமெரிக்க யூனியனிலிருந்து பிரிந்து செல்ல விரும்பிய பிரிவினைவாதிகளால் ரயில் பாதைகளுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் அந்த பிரச்சினையை சமாளிக்க உதவவும் பிங்கர்ட்டன் ஏஜன்சியை கேட்டுக் கொண்டார்.இதைக் குறித்து விசாரணை மேற்கொண்ட ஆலன் ரயில் பாதை ஆபத்துகளையும் விட ஆபத்தான ஒரு சதியினைப் பற்றி அறிந்தார் . அப்போது தேர்தலில் ஜெயித்து அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கவிருந்த ( President-elect) ஆப்ரஹாம் லிங்கனை கொல்ல அடிமை மாகாண ஆதரவாளர்களால் சதிவலை பின்னப்பட்டுள்ளது என்பதுதான் அது.
மேலிடத்தில் இதுபற்றி மேலும் விசாரிக்க அனுமதி பெற்ற ஆலன் கேட்டி வார்னே உட்பட 5 ஏஜன்ட்களை மேரிலாண்டில் உள்ள பால்டிமோருக்கு பிப்ரவரி 3 1861 - ல் அனுப்பினார்.
மிஸஸ் செர்ரி , மிஸஸ் பார்லி போன்ற பெயர்களில் பால்டிமோரில் உலவிய கேட்டி பால்டிமோரின் பார்னம் சிட்டி ஹோட்டலில் தங்கி " தெற்கத்திய இளம் கன்னிகையாக" உருமாறி தெற்கத்திய உச்சரிப்பு , நடிப்புத் திறமை போன்றவற்றால் பிரிவினைவாத கூட்டத்தில் ஊடுருவி முக்கிய தகவல்களை அறிந்தார்
சதித்திட்டம் இதுதான்:
ஜனாதிபதியாக பதவியேற்கும் லிங்கனின் பயண திட்டம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதுதான்.
இலினாயஸ் - ல் உள்ள ஸ்பிரிங் பீல்டில் துவங்கும் ரயில் பயணம் வாஷிங்டன் DC - ல் முடிவடையும். இடையில் 16 இடங்களில் லிங்கன் பேச ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போதிருந்த ரயில் தடங்களின் அமைப்பின் படி வடக்கிலிருந்து வரும் தடங்கள் மேரிலாண்ட் பால்டிமோரில் முடியும்.இறுதி ஸ்டேஷன் கால்வெர்ட் ஸ்ட்ரீட் ஸ்டேஷன்.
தெற்கு நோக்கி பயண ரயில்தடம் காம்டென் ஸ்ட்ரீட்டில் ( தற்போது காம்டென் யார்ட்ஸ் ஸ்டேஷன்)
துவங்கும். கால்வெர்ட் ஸ்ட்ரீட்டிலிருந்து காம்டென் ஸ்ட்ரீட்டுக்கு கோச்வண்டியில்தான் செல்லவேண்டும். சுமார் ஒரு மைல் தூரம்.
கால்வெர்ட் ஸ்ட்ரீட் ஸ்டேஷனிலிருந்து கோச் வண்டியை அணுகும் பாதை மிகவும் குறுகலானது.
லிங்கன் கோச் வண்டியில் ஏறச் செல்கையில் வெளியாட்கள் மூலம் பெரிய கலவரம் ஏற்படுத்தி உள்ளூர் , பாதுகாப்புக்கு வந்திருக்கும் போலிஸின் கவனத்தை திசைதிருப்பி லிங்கனை கொல்வதே ஏற்பாடு.கொலையாளிகள் ஒரு ஸ்டீம் படகு மூலம் செக்கெஸ்பீக் வளைகுடா பகுதிக்கு தப்பிச் செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
கேட்டியிடம் ஒரு கடிதம் கொடுத்த பிங்கர்ட்டன் அப்போது நியூயார்க்கிலிருந்த இலினாய்ஸ் மாகாண முன்னாள் செனட்டர் நார்மன் ஜட்டை பார்க்க சொன்னார்.கொலை முயற்சி பற்றிய விவரங்களை கடிதம் மூலம் அறிந்த நார்மன் தானும் , பிங்கர்ட்டனும், லிங்கனும் பிப்ரவரி 21- ல் தனித்து பேச ஏற்பாடு செய்தார். நார்மன் தனது நலம் விரும்பி என்றபோதும் இந்த கொலை முயற்சியை நம்ப மறுத்தார் ஆப்ரஹாம் லிங்கன்.
ஆனால் நியூயார்க் மாகாண முன்னாள் கவர்னரும், செனட்டரும் அமையப் போகும் அரசில் செகரட்டரி ஆஃப் ஸ்டேட் ஆக பதவியேற்கவிருந்த வில்லியம் ஸீவர்டின் மகன் பிரெடெரிக் ஸீவர்ட் ஆலன் பிங்கர்ட்டனின் தகவல்களை உறுதி செய்து செய்தி அனுப்பவே லிங்கன் பிங்கர்ட்டனின் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏற்க ஒப்புக் கொண்டார்.ஆனால் பென்சில்வேனியாவின் ஹாரிஸ்பெர்க் வரை பயண திட்டத்தில் மாற்றம் செய்ய விரும்பவில்லை.
ஹாரிஸ்பர்க்கில் நடைபெற்று கொண்டிருந்த ஒரு உயர்மட்ட விருந்திலிருந்து இடையிலேயே கிளம்பிய லிங்கன் சாதாரண பயண உடைக்கு மாறி ஒரு சால்வை போர்த்தி ஒரு கை ஊனமுற்றவர் போல் கேட்டியால் மாற்றப்பட்டார்.ஹாரிஸ்பர்க்கிலி ருந்து பிலடெல்பியாவுக்கு ஒரு சிறப்பு பென்சில்வேனியா ரெயில்ரோடு டிரெய்ன் மூலம் வந்த லிங்கன் மற்றொரு சிறப்பு பிலடெல்பியா, வில்மிங்டன் பால்டிமோர் ரயில் மூலம் பால்டிமோர் வந்தடைந்தார்
(லிங்கனின் INAUGURAL JOURNEY MAP என இப்போது பார்த்தால் 16 இடங்களில் பேசினார் என இருக்கும்.
ஆனால் பால்டிமோரில் பேசாமல் இரவுநேரத்தில் கடந்தார் என்றுமட்டுமே இருக்கும்)
இதையெல்லாம் செய்யுமுன்பாக பென்சில்வேனியா- பால்டிமோர் தந்தி தொடர்பு முற்றிலும் செயலிழக்கச் செய்யப்பட்டது.
எதிர்பாராத தேதியில் ( பிப்ரவரி 23-24) எதிர்பாராத நேரத்தில் மாறுவேடத்தில் வந்ததால் பால்டிமோர்- வாஷிங்டன் ரயில் மாற்றத்தில் லிங்கனுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. பென்சில்வேனியா துவங்கி வாஷிங்டன் டிசி வரும்வரை கேட்டி கண்ணுறங்கவில்லை. கண் அயராது செய்த கேட்டி யின் உழைப்பை நேரில் பார்த்த ஆலன் அதன் பின்னரே தனது கம்பெனியின் ஸ்லோகனாக
" We never sleep" என வைத்தார்.
ஊடகங்களில் கேட்டி வார்னே பற்றி பல வடிவங்கள் வந்துள்ளன.
காமிக்ஸ் உலகின் உயரிய விருதான எய்ஸ்னர் விருது பெற்ற , எம்மி விருதும் பெற்ற ஜெஃப் ஜென்ஸன் ஆக்கத்தில் சமீபத்தில் வெளியான கிராபிக் நாவல்
BETTER ANGELS - AN ADVENTURE OF KATE WARNE
Written by Jeff Jensen
Illustrated by George Schall
Published by ARCHAIA
Better angels என்பது லிங்கன் வாஷிங்டன் டிசி யில் பதவியேற்பு விழாவில் உரை ஆற்றியபோது உபயோகித்தவை
லிங்கனின் உயிர்காக்கும் இம்முயற்சியில் கேட்டியின் பங்கு அளப்பரியது.பிங்கர்ட்டன், கேட்டி மட்டுமே இதில் ஈடுபட்டனர். வேறு யாரையும் நம்ப பிங்கர்ட்டன் தயாராக இல்லை. அப்போதிருந்த அரசியல் சூழல் அப்படி.
லிங்கன் இதன் பின்னர் நான்கு ஆண்டுகள் மட்டுமே உயிரோடு இருந்தார். 1865-ல் கொல்லப்பட்டார். உள்நாட்டு போரில் வெற்றி பெற்று ஒருங்கிணைந்த அமெரிக்க தேசத்தை உருவாக்கியதில் அவர் திட மனதுக்கு பெரும் பங்குண்டு.அமெரிக்க நவீன பொருளாதாரத்துக்கு அடிக்கல் நாட்டியவர் அவரே.
அவ்வகையில் கேட்டி வார்னேவை நாம் நினைவு கூறத்தான் வேண்டும்.
கேட்டி வார்னே ஒரு unsung hero தான்.