Thursday, 31 August 2023

மீண்டு வந்த மாயனும்,ஸ்ரோடிங்கரின் பூனையும்

//.ஏன்னா எல்லாமே ஒரு வித இல்யூசன், ஹிப்னாடிசம் என்கிற ரியாலிட்டி தவிர்த்த எலமெண்ட்ஸ்..../// என்னங்க குமார் சார், பொசுக்குன்னு இப்படி சொல்லீட்டிங்க. இல்லுஷன் - னா மாயை. இந்த உலகமே மாயைன்னு உபநிடதங்கள் சொல்லுது.. பிரம்மம் ( Brahman) நிலையானது.. இதர ஜீவாத்மாக்கள்( Atman) தனித் தனியாக இருந்தாலும் ஒன்றோடொன்றும் பிரம்மத்தோடும் இணைந்தேயிருக்கின்றன. ஜீவாத்மாக்களின் உலகம் என்பது மாயை. இது உபநிடதங்கள் சொல்வது. இதை அத்வைத ஆதிசங்கரர் பிரம்மம் சத்யா , ஜகம் மித்யா ( மாயா) என்றார். கீதையில் கிருஷ்ணர் சொல்வதும் இதே. 20-ம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞன் காற்றுவெளியிடை கண்ணம்மா , உந்தன் காதலை எண்ணிக் களிக்கின்றேன் " என்று உருகிய பாரதி "மெய்யோ ? பொய்யோ" என்றெழுதிய கவிதையைப் பாருங்களேன். நிற்பதுவே,நடப்பதுவே,பறப்பதுவே,நீங்களெல்லாம் சொற்பனந் தானோ?-பல தோற்ற மயக்கங்களோ? கற்பதுவே,கேட்பதுவே,கருதுவதே,நீங்க ளெல்லாம் அற்பமாயைகளோ?-உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ? வானகமே,இளவெயிலே,மரச்செறிவே,நீங்களெல்லாம் கானலின் நீரோ?-வெறுங் காட்சிப் பிழைதானோ? போன தெல்லாம் கனவினைப்போற் புதைந்தழிந்தே போனதனால் நானுமோர் கனவோ?-இந்த ஞாலமும் பொய்தானோ? கால மென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பலநினைவும் கோலமும் பொய்களோ?-அங்குக் குணங்களும் பொய்களோ? சோலையிலே மரங்க ளெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால், சோலை பொய்யாமோ?-இதைச் சொல்லொடு சேர்ப்பாரோ? காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்ப மன்றோ? வீண்படு பொய்யிலே-நித்தம் விதிதொடர்ந் திடுமோ? காண்பதுவே உறுதிகண்டோம் காண்பதல்லால் உறுதில்லை காண்பது சக்தியாம்-இந்தக் காட்சி நித்தியமாம். ஆக எது மாயை ? எது உண்மை ? என்ற கவிஞனின் மன மயக்கத்தை கவனியுங்கள். இப்படி உலகமே மாயை எனச் சொன்னால் டெக்ஸின் கதையில் மாயை வரக் கூடாதா? உலகில் இதுவரை அறிவியல் கூறுவது மட்டுமே உண்மை என எடுத்துக் கொண்டாலும் மெய்மை ) (ரியாலிட்டி) என்பதை கேள்வி கேட்கும் குவாண்டம் இயற்பியலை துணைக்கு அழைப்பதை தவிர வேறு வழியில்லை. டெக்ஸ் கதைக்கு குவாண்டம் இயற்பியலா? இந்த மனுஷனை ப்ளாக் மவுண்டன் மன நல காப்பக அறையொன்றில் அடைக்கலாம் என எண்ணினால் அதில் தவறொன்றும் இல்லை. இயக்க விதிகள் இன்ன பிற மூலம் நியூட்டனும் மின்னியல் பிதாமகர்களும் போட்டோ எலக்ட்ரிக் எபக்ட் , ரிலேட்டிவிட்டி கொள்கை மூலம் ஐன்ஸ்டீனும் நவீன பௌதீகத்துக்கு அடித்தளம் அமைத்தனர் . ஆனால் சப் அடாமிக் துகள்கள்( எலக்ட்ரான் போன்றவை) இந்த விதிகளுக்கு உட்பட மறுத்தன. குவாண்டம் தியரியின் மூலம் uncertainty of predicability இன்னும் சுருக்கமாக observer's paradox. மெபிஸ்டோ தனது உடலை விட்டு பிரிந்து வேறோர் இடத்தில் தோன்றுவதை quantum linear superposition என சொல்லுவோமே :-) அதாவது ஒரு துகள் ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் தோன்றுவது. மனிதன் போன்ற நிறையுள்ளவன் இதை எப்படி செய்ய முடியும் எனக் கேட்கிறீர்களா? தற்காலத்திய விஞ்ஞானிகள் இன்னும் செய்ய முடியாத auto quantum separation ஐ மெபிஸ்டோ செய்வதாக வைத்துக் கொள்ளலாம். :) சுவரில் பந்தை அடித்தால் அது திரும்பி வரும் என்பது பௌதீகம். சுவரில் சப் அட்டாமிக் துகள்களை அடித்தால் சில சமயம் சுவருக்கு அந்தப்புறம் ( don't get erotic! Just other side of the wall) வந்துவிடும். இது quantum tunneling . மெபிஸ்டோ கண்ணாடியில் தோன்றுவது ஏன் இது போல் இருக்கக் கூடாது? மெபிஸ்டோவை டெக்ஸின் துப்பாக்கி குண்டு துளைக்காமல் ஊடுருவ காரணம் தனது உடலையே மெபிஸ்டோ குவாண்டம் டனல் என மாற்றுவதுதான் காரணம் என நான் சொல்ல முயன்றால் இதை ஏற்றுக் கொள்ள முனையும் பெருந்தன்மையை வரவழைத்துக் கொள்ள வேண்டுகிறேன்.:-))) பருப் பொருள் , அலைவடிவம் வேறு என்பதாக இருந்த காலத்தில் டி ப்ரோக்லி என்ற பிரெஞ்சு மேதை எல்லா பருப் பொருள்களுக்கும் அலைவடிவம் உண்டு .நீங்கள் பார்க்கும் பொழுது அவை பருப் பொருள் வடிவம் பெற்றிருக்க காரணம் உங்கள் consciousness தான் எனச் சொன்னார். ( எளிமையாகச் சொல்லியிருக்கிறேன்) [Matter - wave duality] இக் கருத்து ஏற்படுத்திய தாக்கத்தினால் ஒரு நண்பருக்கு எழுதிய கடிதத்தில் "உன்னால் நம்ப முடியுமா? நான் பார்ப்பதால்தான் நிலவு அங்கிருக்கிருக்கிறதென்று?" என ஐன்ஸ்டீன் சொன்னார். குவாண்டம் தியரியின் குழப்பத்தை ஒரு சின்ன சம்பவம் மூலம் சொல்கிறார்கள். ஒரு மரம் கீழே விழுந்தால் அதை யாரும் பார்க்க வில்லை யென்றால் அந்த சப்தம் கேட்குமா? பதில் : கேட்கும். ஆனால் அந்த இடத்தில் மரம் இருந்ததா என்றால் அது கிடையாது. கமலஹாசனையே எக்லிப்ஸ் செய்யும் இந்த பதில் மெபிஸ்டோவின் செயல்களுக்கும் அவற்றின் விளைவுகளுக்குமான பதிலாக எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.:-)) இருள் சக்திகள் கதையில் வருகிறது. ஒளியின் வேகத்தை மிஞ்சக் கூடியது இந்த பிரபஞ்சத்தில் எதுவுமில்லை. இது பௌதீக உண்மை. ஆனால் இந்த ஒட்டு மொத்த பிரபஞ்சமும் விரிவடையும் வேகம் ஒளியின் வேகத்தை விட இரு மடங்குக்கு மேல் . பார்க்கக் கூடிய பிரபஞ்சத்துக்கு அப்பால் உள்ள இருள்வெளியில் ஒன்றுமில்லை என எண்ணவேண்டாம். அது அடர்த்தியான ஆற்றல் மிக்கது என ஐன்ஸ்டீனின் ஈர்ப்பு விசைக் கோட்பாடு - ன் ஒரு வெர்ஷன் சொல்கிறது. நவீன வானியல் இந்த இருள் வெளி ஆற்றல் 67% மற்றும் கரும் பொருள் 28%, பூமி மற்றும் ஏனையவை மொத்தமே 5% தான் எனச் சொல்கிறது. இந்த dark energy மற்றும் dark matter எதனாலானது எனச் சொல்ல முடியவில்லை என்றாலும் பிரபஞ்சத்தை விரிவடையச் செய்வது இவையே என்பதில் துளியும் சந்தேகமில்லை. டார்க் சைட் 95 % என்பதால் மிச்ச மீதியிருக்கும் Jedi - களும் தங்களது light sabre- களை கக்கத்தில் செருகிக் கொண்டு நடையைக் கட்டுவது உத்தமம். :-)) இப்படியாப்பட்ட டார்க் எனர்ஜியிடமிருந்து மெபிஸ்டோ துக்கிளியூண்டு டார்க் எனர்ஜி இரவல் பெற்றுக் கொண்டு கதையில் வலம் வருவதாக எண்ணுவது பற்றி பரிசீலிக்கவும். இயற்கை , உலகம் எல்லாம் மாயை எனக் கூறும் உபநிடதங்கள் கூறுவதை வெறும் தத்துவங்கள் என ஒதுக்கிவிட முடியாது. குவாண்டம் கொள்கைகளின் முன்னோடிகள் எனக் கருதப்படும் போர்( Bohr),ஸ்டிரோடிங்கர்( schrodinger) ,ஹெயின்ஸ்பெர்க்(heinsberg) போன்றோர்களும் உபநிடத கூற்றுகளை போற்றியவர்களே. ஸ்டிரோடிங்கர் மிகவும் நேசித்த செல்ல நாயின் பெயர் ATMAN. இப் பதிவுக்கு நேரடியாகத் தொடர்பில்லை என்றாலும் அணு ஆயுத தந்தை எனப்படும் OPPENHEIMER ( படம் பாத்துட்டீங்களா) பகவத் கீதையின் மேல் கொண்ட ஆர்வத்தால் சம்ஸ்கிருதம் கற்றுக் கொண்டு படித்ததாகச் சொல்லப்பட்டு இருக்கிறது. அணு ஆயுதம் செயல்பாட்டுக்கு வந்தபோது கீதையின் வாசகங்களான " I AM GOD OF DEATH. I AM THE DESTRUCTOR OF THE WORLDS" என்பதை ஆங்கிலத்தில் உச்சரித்ததாக தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆக மாயை டெக்ஸ் கதையில் இடம் பெறுவதில் மனக்குழப்பம் ஏற்படாமல் இருக்க மனதை ஆவன செய்து மதிப்பெண்களை கூட்ட முயற்சிக்கவும். டெக்ஸ் கதைகளில் தமிழில் மெபிஸ்டோ வருவது இந்த ஆகஸ்ட் 30 போல் once in a blue moon - தானே? :-) பொறுப்பு துறப்பு : (1) ED -யின் பார்வை தமிழகத்தின் மேல் அதிகம் இருப்பதால் இப்படி டெக்ஸ் கதையை ஆதரித்து எழுத இத்தாலிய பதிப்பகம் எதில் இருந்தும் அன்னிய தொகை எதுவும் பெறவில்லை. :-) பொறுப்பு துறப்பு (2) : இந்த பதிவு டெக்ஸை ஆதரித்து சீரியஸாக எழுதப்பட்டதா? அல்லது நகைச்சுவைக்காக எழுதப்பட்டதா ? எனக் கேள்வி எழுமாயின் பதில் ஸ்டிரோங்கரின் பூனை ( Schrödinger's cat) என்பதே.அதாவது அது பதிவைப் படிப்பவர்களின் பார்வையைப் பொறுத்தது. Observers paradox.:-) பின் குறிப்பு : எழுதி முடித்தவுடன் வாசல் மணி அடித்தது. கதவைத் திறந்தால் ஹவுஸ் ஓனர். ஒண்ணாம் தேதியாச்சு. வாடகை ? என்றார். தொண்டையைக் கனைத்து " நாம் இருவரும் சக ஜீவாத்மாக்கள்". ,நீங்கள் , நான் எல்லாம் மாயை. பணம் கூட மாயைதான். " என்றேன்.அதன் பின் கேட்ட ' கும்' என்ற சப்தமும் உலகம் சுற்றியதும் மாயையா , மெய்மையா எனச் சரியாகத் தெரியவில்லை.