comicsvasanhtham
Thursday, 31 August 2023
மீண்டு வந்த மாயனும்,ஸ்ரோடிங்கரின் பூனையும்
//.ஏன்னா எல்லாமே ஒரு வித இல்யூசன், ஹிப்னாடிசம் என்கிற ரியாலிட்டி தவிர்த்த எலமெண்ட்ஸ்....///
என்னங்க குமார் சார், பொசுக்குன்னு இப்படி சொல்லீட்டிங்க.
இல்லுஷன் - னா மாயை. இந்த உலகமே மாயைன்னு உபநிடதங்கள் சொல்லுது.. பிரம்மம் ( Brahman) நிலையானது.. இதர ஜீவாத்மாக்கள்( Atman) தனித் தனியாக இருந்தாலும் ஒன்றோடொன்றும் பிரம்மத்தோடும் இணைந்தேயிருக்கின்றன.
ஜீவாத்மாக்களின் உலகம் என்பது மாயை. இது உபநிடதங்கள் சொல்வது.
இதை அத்வைத ஆதிசங்கரர்
பிரம்மம் சத்யா , ஜகம் மித்யா ( மாயா) என்றார்.
கீதையில் கிருஷ்ணர் சொல்வதும் இதே.
20-ம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞன்
காற்றுவெளியிடை கண்ணம்மா , உந்தன் காதலை எண்ணிக் களிக்கின்றேன் " என்று உருகிய பாரதி "மெய்யோ ? பொய்யோ" என்றெழுதிய கவிதையைப் பாருங்களேன்.
நிற்பதுவே,நடப்பதுவே,பறப்பதுவே,நீங்களெல்லாம்
சொற்பனந் தானோ?-பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே,கேட்பதுவே,கருதுவதே,நீங்க ளெல்லாம்
அற்பமாயைகளோ?-உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?
வானகமே,இளவெயிலே,மரச்செறிவே,நீங்களெல்லாம்
கானலின் நீரோ?-வெறுங் காட்சிப் பிழைதானோ?
போன தெல்லாம் கனவினைப்போற் புதைந்தழிந்தே போனதனால்
நானுமோர் கனவோ?-இந்த ஞாலமும் பொய்தானோ?
கால மென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பலநினைவும்
கோலமும் பொய்களோ?-அங்குக் குணங்களும் பொய்களோ?
சோலையிலே மரங்க ளெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால்,
சோலை பொய்யாமோ?-இதைச் சொல்லொடு சேர்ப்பாரோ?
காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்ப மன்றோ?
வீண்படு பொய்யிலே-நித்தம் விதிதொடர்ந் திடுமோ?
காண்பதுவே உறுதிகண்டோம் காண்பதல்லால் உறுதில்லை
காண்பது சக்தியாம்-இந்தக் காட்சி நித்தியமாம்.
ஆக எது மாயை ? எது உண்மை ? என்ற கவிஞனின் மன மயக்கத்தை கவனியுங்கள்.
இப்படி உலகமே மாயை எனச் சொன்னால் டெக்ஸின் கதையில் மாயை வரக் கூடாதா?
உலகில் இதுவரை அறிவியல் கூறுவது மட்டுமே உண்மை என எடுத்துக் கொண்டாலும் மெய்மை ) (ரியாலிட்டி) என்பதை கேள்வி கேட்கும் குவாண்டம் இயற்பியலை துணைக்கு அழைப்பதை தவிர வேறு வழியில்லை.
டெக்ஸ் கதைக்கு குவாண்டம் இயற்பியலா? இந்த மனுஷனை ப்ளாக் மவுண்டன் மன நல காப்பக அறையொன்றில் அடைக்கலாம் என எண்ணினால் அதில் தவறொன்றும் இல்லை.
இயக்க விதிகள் இன்ன பிற மூலம் நியூட்டனும் மின்னியல் பிதாமகர்களும் போட்டோ எலக்ட்ரிக் எபக்ட் , ரிலேட்டிவிட்டி கொள்கை மூலம் ஐன்ஸ்டீனும் நவீன பௌதீகத்துக்கு அடித்தளம் அமைத்தனர் .
ஆனால் சப் அடாமிக் துகள்கள்( எலக்ட்ரான் போன்றவை) இந்த விதிகளுக்கு உட்பட மறுத்தன.
குவாண்டம் தியரியின் மூலம் uncertainty of predicability இன்னும் சுருக்கமாக observer's paradox.
மெபிஸ்டோ தனது உடலை விட்டு பிரிந்து வேறோர் இடத்தில் தோன்றுவதை quantum linear superposition என சொல்லுவோமே
:-) அதாவது ஒரு துகள் ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் தோன்றுவது.
மனிதன் போன்ற நிறையுள்ளவன் இதை எப்படி செய்ய முடியும் எனக் கேட்கிறீர்களா? தற்காலத்திய விஞ்ஞானிகள் இன்னும் செய்ய முடியாத auto quantum separation ஐ மெபிஸ்டோ செய்வதாக வைத்துக் கொள்ளலாம். :)
சுவரில் பந்தை அடித்தால் அது திரும்பி வரும் என்பது பௌதீகம்.
சுவரில் சப் அட்டாமிக் துகள்களை அடித்தால் சில சமயம் சுவருக்கு அந்தப்புறம் ( don't get erotic! Just other side of the wall) வந்துவிடும்.
இது quantum tunneling . மெபிஸ்டோ கண்ணாடியில் தோன்றுவது ஏன் இது போல் இருக்கக் கூடாது?
மெபிஸ்டோவை டெக்ஸின் துப்பாக்கி குண்டு துளைக்காமல் ஊடுருவ காரணம் தனது உடலையே மெபிஸ்டோ குவாண்டம் டனல் என மாற்றுவதுதான் காரணம் என நான் சொல்ல முயன்றால் இதை ஏற்றுக் கொள்ள முனையும் பெருந்தன்மையை வரவழைத்துக் கொள்ள வேண்டுகிறேன்.:-)))
பருப் பொருள் , அலைவடிவம் வேறு என்பதாக இருந்த காலத்தில் டி ப்ரோக்லி என்ற பிரெஞ்சு மேதை எல்லா பருப் பொருள்களுக்கும் அலைவடிவம் உண்டு .நீங்கள் பார்க்கும் பொழுது அவை பருப் பொருள் வடிவம் பெற்றிருக்க காரணம் உங்கள் consciousness தான் எனச் சொன்னார். ( எளிமையாகச் சொல்லியிருக்கிறேன்)
[Matter - wave duality]
இக் கருத்து ஏற்படுத்திய தாக்கத்தினால் ஒரு நண்பருக்கு எழுதிய கடிதத்தில்
"உன்னால் நம்ப முடியுமா? நான் பார்ப்பதால்தான் நிலவு அங்கிருக்கிருக்கிறதென்று?"
என ஐன்ஸ்டீன் சொன்னார்.
குவாண்டம் தியரியின் குழப்பத்தை ஒரு சின்ன சம்பவம் மூலம் சொல்கிறார்கள்.
ஒரு மரம் கீழே விழுந்தால் அதை யாரும் பார்க்க வில்லை யென்றால் அந்த சப்தம் கேட்குமா?
பதில் : கேட்கும். ஆனால் அந்த இடத்தில் மரம் இருந்ததா என்றால் அது கிடையாது.
கமலஹாசனையே எக்லிப்ஸ் செய்யும் இந்த பதில் மெபிஸ்டோவின் செயல்களுக்கும் அவற்றின் விளைவுகளுக்குமான பதிலாக எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.:-))
இருள் சக்திகள் கதையில் வருகிறது.
ஒளியின் வேகத்தை மிஞ்சக் கூடியது இந்த பிரபஞ்சத்தில் எதுவுமில்லை. இது பௌதீக உண்மை.
ஆனால் இந்த ஒட்டு மொத்த பிரபஞ்சமும் விரிவடையும் வேகம் ஒளியின் வேகத்தை விட இரு மடங்குக்கு மேல் .
பார்க்கக் கூடிய பிரபஞ்சத்துக்கு அப்பால் உள்ள இருள்வெளியில் ஒன்றுமில்லை என எண்ணவேண்டாம். அது அடர்த்தியான ஆற்றல் மிக்கது என ஐன்ஸ்டீனின் ஈர்ப்பு விசைக் கோட்பாடு - ன் ஒரு வெர்ஷன் சொல்கிறது.
நவீன வானியல் இந்த இருள் வெளி ஆற்றல் 67% மற்றும் கரும் பொருள் 28%, பூமி மற்றும் ஏனையவை மொத்தமே 5% தான் எனச் சொல்கிறது.
இந்த dark energy மற்றும் dark matter எதனாலானது எனச் சொல்ல முடியவில்லை என்றாலும் பிரபஞ்சத்தை விரிவடையச் செய்வது இவையே என்பதில் துளியும் சந்தேகமில்லை.
டார்க் சைட் 95 % என்பதால் மிச்ச மீதியிருக்கும் Jedi - களும் தங்களது light sabre- களை கக்கத்தில் செருகிக் கொண்டு நடையைக் கட்டுவது உத்தமம். :-))
இப்படியாப்பட்ட டார்க் எனர்ஜியிடமிருந்து மெபிஸ்டோ துக்கிளியூண்டு டார்க் எனர்ஜி இரவல் பெற்றுக் கொண்டு கதையில் வலம் வருவதாக எண்ணுவது பற்றி பரிசீலிக்கவும்.
இயற்கை , உலகம் எல்லாம் மாயை எனக் கூறும் உபநிடதங்கள் கூறுவதை வெறும் தத்துவங்கள் என ஒதுக்கிவிட முடியாது.
குவாண்டம் கொள்கைகளின் முன்னோடிகள் எனக் கருதப்படும் போர்( Bohr),ஸ்டிரோடிங்கர்( schrodinger) ,ஹெயின்ஸ்பெர்க்(heinsberg)
போன்றோர்களும் உபநிடத கூற்றுகளை போற்றியவர்களே.
ஸ்டிரோடிங்கர் மிகவும் நேசித்த செல்ல நாயின் பெயர் ATMAN.
இப் பதிவுக்கு நேரடியாகத் தொடர்பில்லை என்றாலும் அணு ஆயுத தந்தை எனப்படும் OPPENHEIMER ( படம் பாத்துட்டீங்களா) பகவத் கீதையின் மேல் கொண்ட ஆர்வத்தால் சம்ஸ்கிருதம் கற்றுக் கொண்டு படித்ததாகச் சொல்லப்பட்டு இருக்கிறது.
அணு ஆயுதம் செயல்பாட்டுக்கு வந்தபோது கீதையின் வாசகங்களான " I AM GOD OF DEATH. I AM THE DESTRUCTOR OF THE WORLDS" என்பதை ஆங்கிலத்தில்
உச்சரித்ததாக தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஆக மாயை டெக்ஸ் கதையில் இடம் பெறுவதில் மனக்குழப்பம் ஏற்படாமல் இருக்க மனதை ஆவன செய்து மதிப்பெண்களை கூட்ட முயற்சிக்கவும்.
டெக்ஸ் கதைகளில் தமிழில் மெபிஸ்டோ வருவது இந்த ஆகஸ்ட் 30 போல் once in a blue moon - தானே? :-)
பொறுப்பு துறப்பு : (1) ED -யின் பார்வை தமிழகத்தின் மேல் அதிகம் இருப்பதால் இப்படி டெக்ஸ் கதையை ஆதரித்து எழுத இத்தாலிய பதிப்பகம் எதில் இருந்தும் அன்னிய தொகை எதுவும் பெறவில்லை. :-)
பொறுப்பு துறப்பு (2) : இந்த பதிவு டெக்ஸை ஆதரித்து சீரியஸாக எழுதப்பட்டதா? அல்லது நகைச்சுவைக்காக எழுதப்பட்டதா ?
எனக் கேள்வி எழுமாயின் பதில் ஸ்டிரோங்கரின் பூனை ( Schrödinger's cat) என்பதே.அதாவது
அது பதிவைப் படிப்பவர்களின் பார்வையைப் பொறுத்தது. Observers paradox.:-)
பின் குறிப்பு : எழுதி முடித்தவுடன் வாசல் மணி அடித்தது. கதவைத் திறந்தால் ஹவுஸ் ஓனர். ஒண்ணாம் தேதியாச்சு. வாடகை ? என்றார். தொண்டையைக் கனைத்து " நாம் இருவரும் சக ஜீவாத்மாக்கள்". ,நீங்கள் , நான் எல்லாம் மாயை. பணம் கூட மாயைதான். " என்றேன்.அதன் பின் கேட்ட ' கும்' என்ற சப்தமும் உலகம் சுற்றியதும் மாயையா , மெய்மையா எனச் சரியாகத் தெரியவில்லை.
Tuesday, 25 October 2022
கேட்டி வார்னே
WE NEVER SLEEP
வருடம் 1868
"அப்படியா உயில்ல எழுதியிருக்காரு?"
"ஆமா! க்ரேஸ்லாண்ட் தோட்டத்தில்( Graceland cemetery) அவர் குடும்பத்துக்கான கல்லறைக்கான
பகுதியில அந்தப் பொண்ணோட உடல் புதைக்கப்படப் போகுது. அவர்கிட்ட வேலை செஞ்ச பொண்ணுங்கிறதால குடும்பத்தைச் சேர்ந்தவள் இல்லைன்னு சொல்லி அந்த இடத்தை வேறு யாருக்கும் எந்த காலத்திலும் அவரோட வாரிசுகள் விற்க முடியாதுன்னு உயில்ல அழுத்தம் திருத்தமா எழுதியிருக்கார்.."
"மரணத்துக்குப் பின்னாடியும் அந்தப் பொண்ணோட அமைதி கெடக்கூடாதுன்னு நினைக்கிறார் போல. "
யார் அந்தப் பெண்?
யார் அந்தப் பெரிய மனிதர்?
வருடம் 1856
அந்த அலுவலகத்தின் உள்ளே நுழைந்த பெண் சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போகிறார்கள் வரவேற்பு பகுதியில் உள்ளவர்கள்.
"முடியாது " என அவர்கள் சொன்னதை அப்பெண் ஏற்க மறுக்கவே முதலாளியிடம் அழைத்து செல்கிறார்கள்.முதலாளிக்கும் அப் பெண்ணுக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. முதலாளி "ஆட்கள் வேண்டும்" என பத்திரிக்கையில் விளம்பரம் கொடுத்தது உண்மை.
ஆனால் அவர் தொழிலுக்கு ஆண்களையும் வரவேற்பு, கிளார்க் போன்ற பணிகளுக்கு பெண்களையும் கேட்டிருந்தார்.
இப் பெண்ணோ ஆண்கள் செய்யும் வேலையை தான் செய்வேன் என மல்லுக் கட்டி நின்றார். இப் பணியில் ஆண்களால் நுழையவே முடியாத இடங்களிலும் தன்னால் பணியாற்ற முடியும் என வாதித்தார்.
முதலாளியும்சாமான்யப்பட்டவரல்ல . இதை ஒத்துக் கொண்டு அவருக்கு அப் பணியை அளித்தார். நினைத்தே பார்க்க முடியாத காலகட்டம்.
இப்படியாக அமெரிக்காவின் முதல் துப்பறியும் பெண்மணியாக வரலாற்றில் இடம் பதித்து நுழைந்தார் KATE WARNE கேட்டி வார்னே
பெண்களுக்கான ஓட்டுரிமையே இந்நிகழ்வுக்கு 64 வருடங்களுக்குப் பின்னரே சாத்தியமானது எனும்போது இது பெரும் முயற்சிதான்.
சம்பவம் நடந்த இடம் சிகாகோவில் உள்ள பிங்கர்ட்டன் ஏஜன்சியின் தலைமை அலுவலகம்.முதலாளி ஆலன் பிங்கர்ட்டன்.
தனது உயிலில் கேட்டி வார்னேயின் கல்லறைத் துயில் எக்காலத்திலும் கலைக்கப்படக்கூடாது என எழுதியவர் ஆலன் பிங்கர்ட்டன்தான்.
இலினாய்ஸின் சிகாகோவில் உள்ள கிரேஸ்லாண்ட் மயானப் பகுதியில் ( Graceland cemetery - Chicago, Illinois)
NOTABLE BURIALS என்பதின் கீழ் கேட்டி வார்னேயின் பெயர் இன்றும் உள்ளது. Tombstone- னை இன்றும் நேரில் காண முடியும்.( பிங்கர்ட்டன் பேரும் இதில் உண்டு).வரலாறில் அழிக்கமுடியாத முத்திரை பதித்து சென்ற ஒரு பெண்ணை பற்றிய கதையை வெளியிட்டதன் மூலம் வெறுமனே " பெண் உளவாளி" என முத்திரை குத்தப்பட்டு பிரெஞ்சு அரசால் பலிகடா ஆக்கப்பட்ட ஒரு பெண்ணின் கதையை வெளியிட்டதன் மூலம் எடிட்டர் சாருக்கு ஏற்பட்ட வருத்தத்தை இக்கதை அறவே போக்குவதோடு டெக்ஸ் கதைகளில் ஒரு முக்கிய இடத்தையும் அளிக்கிறது. காரணங்கள் பின் வருகின்றன.
கேட்டி வார்னே பற்றி
" கட்டளைகள் பிறப்பிக்கவென்றே பிறந்தது போல் தோற்றம்,முகத்தில் நேர்மை தொனித்தது, மெல்லிய ஆனால் உறுதியான உடல்வாகு, பிரௌன் நிற கேசம்,
உடலசைவுகளில் நளினம்,அழகு என்பதை விட அறிவார்ந்த முகம், உணர்ச்சி ததும்பும் தெளிவான முகவெட்டு
- பிங்கர்ட்டன் 1883-ல் வெளியான THE SPY OF THE REBELLION நூலில்.
ஆடம்ஸ் எக்ஸ்பிரஸ் கையாடல் வழக்கு
1858-ல் ஆடம்ஸ் எக்ஸ்பிரஸ் கம்பெனியில் 50000 டாலர்கள் மாயமாக மறைந்தன. இதைத் துப்புதுலக்க பிங்கர்ட்டனை நாடினார் கம்பெனியின் அதிபர்.
(போக்குவரத்து கம்பெனியாக 1854 - ல் துவங்கி 1929 - ல் Closed end fund- equity fund என்ற முறையில் இயங்கிய இக் கம்பெனி கிரேட் டிப்ரஷனை எல்லாம் சமாளித்து இதே முறையில் ஆடம்ஸ் ஃபண்ட்ஸ் என இன்றும் இயங்கி வருகிறது.)
முக்கிய கையாடல் குற்றவாளியாக அலபாமாவைச் சேர்ந்த மரோனி சந்தேகிக்கப்பட்டபோதிலும் ஆதாரங்கள் இல்லை. மரோனியின் மனைவியுடன் நெருங்கிப் பழகி பல விஷயங்களை கிரகித்த கேட்டியின் திறமையால் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 40000 டாலர்கள் மீட்கப்பட்டன.மரோனிக்கு அலபாமா சிறையில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது.கேட்டியின் மீதான பிங்கர்ட்டனின் ஆழமான நம்பிக்கையை இச்சம்பவம் உறுதிப்படுத்தியது.
கேட்டி வார்னே அமெரிக்க சிவில் வாரின் போதும் அதற்கு பின்னரும் பல சிறிதும் பெரிதுமான சாகசங்களில் ஈடுபட்டிருந்தாலும் நமது ஒரு மாயனோடு மோதல் கதையோடு தொடர்புடைய ஒரு சம்பவத்தை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
1860 -ல் பல பெண் டிடெக்டிவ்ஸ்களை நியமித்த ஆலன் பிங்கர்ட்டன் அவர்களுக்கு மேலாளராக கேட்டியை நியமித்தார்.
பால்டிமோர் சதிவலை
1861-ல் பிலடெல்பியா - வில்மிங்டன்- பால்டிமோர் ரயில்பாதையின் அதிபர் சாமுவேல் ஃபெல்ட்டன் ஆலன் பிங்கர்ட்டனை அணுகினார் . மேரிலாண்ட் மாகாண பகுதியில் அப்போதைய அரசியல் சூழ்நிலையில் அமெரிக்க யூனியனிலிருந்து பிரிந்து செல்ல விரும்பிய பிரிவினைவாதிகளால் ரயில் பாதைகளுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் அந்த பிரச்சினையை சமாளிக்க உதவவும் பிங்கர்ட்டன் ஏஜன்சியை கேட்டுக் கொண்டார்.இதைக் குறித்து விசாரணை மேற்கொண்ட ஆலன் ரயில் பாதை ஆபத்துகளையும் விட ஆபத்தான ஒரு சதியினைப் பற்றி அறிந்தார் . அப்போது தேர்தலில் ஜெயித்து அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கவிருந்த ( President-elect) ஆப்ரஹாம் லிங்கனை கொல்ல அடிமை மாகாண ஆதரவாளர்களால் சதிவலை பின்னப்பட்டுள்ளது என்பதுதான் அது.
மேலிடத்தில் இதுபற்றி மேலும் விசாரிக்க அனுமதி பெற்ற ஆலன் கேட்டி வார்னே உட்பட 5 ஏஜன்ட்களை மேரிலாண்டில் உள்ள பால்டிமோருக்கு பிப்ரவரி 3 1861 - ல் அனுப்பினார்.
மிஸஸ் செர்ரி , மிஸஸ் பார்லி போன்ற பெயர்களில் பால்டிமோரில் உலவிய கேட்டி பால்டிமோரின் பார்னம் சிட்டி ஹோட்டலில் தங்கி " தெற்கத்திய இளம் கன்னிகையாக" உருமாறி தெற்கத்திய உச்சரிப்பு , நடிப்புத் திறமை போன்றவற்றால் பிரிவினைவாத கூட்டத்தில் ஊடுருவி முக்கிய தகவல்களை அறிந்தார்
சதித்திட்டம் இதுதான்:
ஜனாதிபதியாக பதவியேற்கும் லிங்கனின் பயண திட்டம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதுதான்.
இலினாயஸ் - ல் உள்ள ஸ்பிரிங் பீல்டில் துவங்கும் ரயில் பயணம் வாஷிங்டன் DC - ல் முடிவடையும். இடையில் 16 இடங்களில் லிங்கன் பேச ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போதிருந்த ரயில் தடங்களின் அமைப்பின் படி வடக்கிலிருந்து வரும் தடங்கள் மேரிலாண்ட் பால்டிமோரில் முடியும்.இறுதி ஸ்டேஷன் கால்வெர்ட் ஸ்ட்ரீட் ஸ்டேஷன்.
தெற்கு நோக்கி பயண ரயில்தடம் காம்டென் ஸ்ட்ரீட்டில் ( தற்போது காம்டென் யார்ட்ஸ் ஸ்டேஷன்)
துவங்கும். கால்வெர்ட் ஸ்ட்ரீட்டிலிருந்து காம்டென் ஸ்ட்ரீட்டுக்கு கோச்வண்டியில்தான் செல்லவேண்டும். சுமார் ஒரு மைல் தூரம்.
கால்வெர்ட் ஸ்ட்ரீட் ஸ்டேஷனிலிருந்து கோச் வண்டியை அணுகும் பாதை மிகவும் குறுகலானது.
லிங்கன் கோச் வண்டியில் ஏறச் செல்கையில் வெளியாட்கள் மூலம் பெரிய கலவரம் ஏற்படுத்தி உள்ளூர் , பாதுகாப்புக்கு வந்திருக்கும் போலிஸின் கவனத்தை திசைதிருப்பி லிங்கனை கொல்வதே ஏற்பாடு.கொலையாளிகள் ஒரு ஸ்டீம் படகு மூலம் செக்கெஸ்பீக் வளைகுடா பகுதிக்கு தப்பிச் செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
கேட்டியிடம் ஒரு கடிதம் கொடுத்த பிங்கர்ட்டன் அப்போது நியூயார்க்கிலிருந்த இலினாய்ஸ் மாகாண முன்னாள் செனட்டர் நார்மன் ஜட்டை பார்க்க சொன்னார்.கொலை முயற்சி பற்றிய விவரங்களை கடிதம் மூலம் அறிந்த நார்மன் தானும் , பிங்கர்ட்டனும், லிங்கனும் பிப்ரவரி 21- ல் தனித்து பேச ஏற்பாடு செய்தார். நார்மன் தனது நலம் விரும்பி என்றபோதும் இந்த கொலை முயற்சியை நம்ப மறுத்தார் ஆப்ரஹாம் லிங்கன்.
ஆனால் நியூயார்க் மாகாண முன்னாள் கவர்னரும், செனட்டரும் அமையப் போகும் அரசில் செகரட்டரி ஆஃப் ஸ்டேட் ஆக பதவியேற்கவிருந்த வில்லியம் ஸீவர்டின் மகன் பிரெடெரிக் ஸீவர்ட் ஆலன் பிங்கர்ட்டனின் தகவல்களை உறுதி செய்து செய்தி அனுப்பவே லிங்கன் பிங்கர்ட்டனின் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏற்க ஒப்புக் கொண்டார்.ஆனால் பென்சில்வேனியாவின் ஹாரிஸ்பெர்க் வரை பயண திட்டத்தில் மாற்றம் செய்ய விரும்பவில்லை.
ஹாரிஸ்பர்க்கில் நடைபெற்று கொண்டிருந்த ஒரு உயர்மட்ட விருந்திலிருந்து இடையிலேயே கிளம்பிய லிங்கன் சாதாரண பயண உடைக்கு மாறி ஒரு சால்வை போர்த்தி ஒரு கை ஊனமுற்றவர் போல் கேட்டியால் மாற்றப்பட்டார்.ஹாரிஸ்பர்க்கிலி ருந்து பிலடெல்பியாவுக்கு ஒரு சிறப்பு பென்சில்வேனியா ரெயில்ரோடு டிரெய்ன் மூலம் வந்த லிங்கன் மற்றொரு சிறப்பு பிலடெல்பியா, வில்மிங்டன் பால்டிமோர் ரயில் மூலம் பால்டிமோர் வந்தடைந்தார்
(லிங்கனின் INAUGURAL JOURNEY MAP என இப்போது பார்த்தால் 16 இடங்களில் பேசினார் என இருக்கும்.
ஆனால் பால்டிமோரில் பேசாமல் இரவுநேரத்தில் கடந்தார் என்றுமட்டுமே இருக்கும்)
இதையெல்லாம் செய்யுமுன்பாக பென்சில்வேனியா- பால்டிமோர் தந்தி தொடர்பு முற்றிலும் செயலிழக்கச் செய்யப்பட்டது.
எதிர்பாராத தேதியில் ( பிப்ரவரி 23-24) எதிர்பாராத நேரத்தில் மாறுவேடத்தில் வந்ததால் பால்டிமோர்- வாஷிங்டன் ரயில் மாற்றத்தில் லிங்கனுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. பென்சில்வேனியா துவங்கி வாஷிங்டன் டிசி வரும்வரை கேட்டி கண்ணுறங்கவில்லை. கண் அயராது செய்த கேட்டி யின் உழைப்பை நேரில் பார்த்த ஆலன் அதன் பின்னரே தனது கம்பெனியின் ஸ்லோகனாக
" We never sleep" என வைத்தார்.
ஊடகங்களில் கேட்டி வார்னே பற்றி பல வடிவங்கள் வந்துள்ளன.
காமிக்ஸ் உலகின் உயரிய விருதான எய்ஸ்னர் விருது பெற்ற , எம்மி விருதும் பெற்ற ஜெஃப் ஜென்ஸன் ஆக்கத்தில் சமீபத்தில் வெளியான கிராபிக் நாவல்
BETTER ANGELS - AN ADVENTURE OF KATE WARNE
Written by Jeff Jensen
Illustrated by George Schall
Published by ARCHAIA
Better angels என்பது லிங்கன் வாஷிங்டன் டிசி யில் பதவியேற்பு விழாவில் உரை ஆற்றியபோது உபயோகித்தவை
லிங்கனின் உயிர்காக்கும் இம்முயற்சியில் கேட்டியின் பங்கு அளப்பரியது.பிங்கர்ட்டன், கேட்டி மட்டுமே இதில் ஈடுபட்டனர். வேறு யாரையும் நம்ப பிங்கர்ட்டன் தயாராக இல்லை. அப்போதிருந்த அரசியல் சூழல் அப்படி.
லிங்கன் இதன் பின்னர் நான்கு ஆண்டுகள் மட்டுமே உயிரோடு இருந்தார். 1865-ல் கொல்லப்பட்டார். உள்நாட்டு போரில் வெற்றி பெற்று ஒருங்கிணைந்த அமெரிக்க தேசத்தை உருவாக்கியதில் அவர் திட மனதுக்கு பெரும் பங்குண்டு.அமெரிக்க நவீன பொருளாதாரத்துக்கு அடிக்கல் நாட்டியவர் அவரே.
அவ்வகையில் கேட்டி வார்னேவை நாம் நினைவு கூறத்தான் வேண்டும்.
கேட்டி வார்னே ஒரு unsung hero தான்.
Friday, 31 August 2018
மர்ம கத்தி
மர்ம கத்தி ...
ஏற்கனவே சொன்னது போல் கதை முழுதுமே கனவே ..
இது விஞ்ஞான கதை அல்ல ...
என்னை பொறுத்தவரை
மெட்டாபிசிக்ஸ் கதையை நடத்துகிறது ..
கனவுலகினை இக்கதை ஒரு
இணை பிரபஞ்சமாக கையாள்கிறது ...(parallel
universe ). உறக்கம் அதற்கான போர்ட்டல் .
நமது பிரபஞ்சத்தில் காலம் என்பது ஒரு மாயை..அது சார்புடையது
...
ஐன்ஸ்டீனின் ஸ்பெஷல்
தியரி ஆப் ரிலேட்டிவிட்டி/ஜெனரல் தியரி ஆப் ரிலேட்டிவிட்டி காலத்தில் முன்னோக்கி
/பின்னோக்கி பயணிப்பது பற்றி வழிவகைகள் இருப்பது பற்றி சொன்னாலும் அவற்றை
செயலாக்கம் செய்வது நடைமுறையில் இயலாத காரியம் ..
நமது கதையில் உள்ள கனவுலகான இணை
பிரபஞ்சத்தில்
காலத்தின் பின்னோக்கி செல்ல
ஒளியின் வேகத்தினை விட அதிக வேகத்தில்
பயணிக்கவேண்டும்
காலத்தினை கிராவிடேஷனல் விசையை பயன்படுத்தி
லூப்களாக மடக்கி பின் செல்லவேண்டும்
போன்ற சாத்தியமேயில்லாத கட்டுப்பாடுகள் இல்லை ..
மெட்டாபிசிக்ஸ் –ன் மனம்,உடல் பற்றிய கிளை சித்தாந்தங்களை அடியொற்றி
எழுதப்பட்ட இக்கதை இருமனிதர்கள் பருப்பொருளாகவே காலத்தின் பின்னோக்கி பயணிப்பதாக
அதாவது கனவுலக பிரஜைகளாக இருப்பினும் வர்ணனை செய்கிறது ....
இது கனவுலகம் என்பது ஒரு இணை பிரபஞ்சம்
என்றால் மட்டுமே சாத்தியம் ...
இவர்கள் போட்டு சென்ற ஆடையை விட்டு பல நூற்றாண்டுகளுக்கு
முன் அணிந்த ஆடையை திரும்பி அணிந்து
வருவதும் .
ரோலனின் கத்தி ரோஜரின் கூடவே பயணிப்பதும் இக்காரணத்தினால்தான்..
காலத்தில் பின்னோக்கி/முன்னோக்கி பயணிக்க ஒளியின் வேகத்தில் பயணிக்கவேண்டும் ..
உதாரணமாக ரோலனின் கத்தியும் ஒளியின் வேகத்தில் முன்னோக்கி பயணிக்குமாயின்
நிறை –சக்தி கோட்பாட்டின்படி கத்தியின் நிறை முடிவிலி (infinite ) என அதிகரிக்கும்
...இக்கத்தியை நகர்த்துவதற்கான சக்தியின் அளவும் முடிவிலி என அதிகரிக்கும் ...இது
நடைமுறைக்கு ஒவ்வாதது ..
இதெல்லாம் நமது
பிரபஞ்சத்தில் ..
கனவுநிலையில் உணர்நிலையில் உள்ளதாக
காண்பிக்கப்படும் நமது ரோஜர் மற்றும் பில்லுக்கு இக்கோட்பாடுகள் இணை
பிரபஞ்சவாசிகள் என்பதால் பொருந்தாது..
ரோஜர் மற்றும் பில்
காலத்தில் பின்னோக்கி செல்ல கால இயந்திரம் தேவையில்லை என்பது கதை உணர்த்தும்
செய்தி ..
இருபதாம் நூற்றாண்டு
செல்லவேண்டும் என்ற எண்ணத்துடன் உறங்க துவங்கும் அவர்கள் மறுபடியும் கனவுலகின்
வாயிலாகவே இருபதாம் நூற்றாண்டை முன்னோக்கி பயணித்து வந்தடைகிறார்கள் ..
பலசமயங்களில் விஞ்ஞானம்
தனது எல்லையை தொட்டு நிற்பதை தாண்டி
விளக்கமளிக்க மெட்டாபிசிக்ஸ் முயன்று இருக்கிறது ...
நவீன விஞ்ஞானம்
மெட்டாபிசிக்ஸ்-தத்துவத்தை வறட்டு வேதாந்தம் என்றே அழைக்க முற்படுகிறது ....
நாமும் உறங்கி முயற்சி செய்து பார்ப்போம் ..
கனவுலகின் பிரஜைகளானால் காலத்தின் முன்னோக்கி
சென்று இரத்தப்படலம் வண்ண இதழ்களை ,டைனமைட் இதழ்களை எடிட்டர் அச்சிட்டு முதல்
பிரதியை ரசித்து கொண்டு இருக்கும்போது நாமும் அருகில் போய் ரசிக்கலாம் ...
காலையில் எழும்போது படுக்கையின் கீழ் டைனமைட்
இதழின் டஸ்ட் கவர் கிடைக்குமாயின் அதிசயிக்க வேண்டாம் ...
பின் குறிப்பு : வேறுவித சிந்தனைகள் நண்பர்கள்
யாருக்கும் இருக்குமாயின் முன்வைக்கலாம் ...
Thursday, 30 August 2018
Saturday, 28 July 2018
நான்கு கோடி காமிக்ஸ் வெளியிட்ட நாயகன்
[நான்கு கோடி காமிக்ஸ் வெளியிட்ட நாயகன் என்ற
தலைப்பில் சென்ற வருட ஈரோடு புத்தக திருவிழாவில் எடிட்டரை பற்றி நான் பேச
உத்தேசித்து இருந்த பொருளடக்கம் சிறிது மாறுதல்களுடன் ...இவ்வருடம் நான் கலந்து
கொள்ள இயலாது என்பதால் ]
நண்பர்களுக்கு வணக்கம் !
காமிக்ஸ் வானின் நட்சத்திரங்களாகிய காமிரேடுகள் நாற்காலியில் எதிரே வீற்று இருக்க
மின்மினிபூச்சியாகிய யான் மேடையேறி பேசுவது என்பது நகைமுரணே.
இங்கு நடைபெறும் விழாவின் கோலாகலங்கள்
பூம்புகாரில் நடைபெற்ற இந்திர விழா வர்ணனைகளை நினைவூட்டுகின்றன ..
ஈரோடு விஜய் உள்ளிட்ட வரவேற்பு குழுவினர் நெடும்
தொலைவில் இருந்து வரும் நண்பர்களை புன்னகை என்னும் நறுமணம் சுமந்து காமிக்ஸ் வாசகர்கள்
அல்லாத பொது மாந்தர்கள் மத்தியில் நீந்தி வரவேற்பது
அகில் உண விரித்த அம்
மென் கூந்தல்
முகில்நுழை
மதியத்து முரிகரும்
என்ற வரிகளை நினைவூட்டுகிறது .
நெடுநாள் பிரிவுக்கு பின் தலைவி அகில் நறுமணம்
கமழும் கூந்தலுடன் மேகத்தில் நுழைந்த முழுமதி போல் நின்று தலைவனை வரவேற்கிறாளாம்.
ஆகஸ்ட் மாதம் காமிக்ஸ் ஏதுமில்லை என நோயுற்று
இருக்கும் வாசகர்களின் நிலை அறிவோம் ..
இந்நிலைக்கு மருந்துதான் என்ன ?
அவள் தந்த நோய்க்கு அவளே மருந்து என்றார்
வள்ளுவர் ..
’பிணிக்கு மருந்து பிறமன், அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து.’
என சொன்னார் ..
ஆகஸ்ட் மாத காமிக்ஸ் நோய்க்கு மருந்தாக
மகோன்னத புகழுற்ற இரத்தப்படலம் இன்னும் சிறிது நேரத்தில் வெளியிடப்பட போகிறது ..
அதுசரி ..காமிக்சால் ஏற்பட்ட நோய்க்கு
காமிக்ஸ்தானே மருந்தாக இருக்கமுடியும் .
விழா
சிறப்புற நடைபெறுகிறது எனினும் அதன் நாயகனை பாராட்டவே இங்கு வந்தேன்..
முப்பது ஆண்டுகளுக்கு மேலாக காமிக்ஸ்
மொழிபெயர்ப்பு மற்றும் அச்சு நுணுக்கங்கள் பற்றி அறிந்த ஆசிரியரை பாராட்ட இந்த
மூடமதியாளனுக்கு என்ன தகுதி உள்ளது ?
ஷெனாய் வாத்திய கருவிக்கு பதிலாக சில்வண்டின்
ரீங்காரம் இசையாகுமா என்ற கேள்வி இங்கிருக்கும் பலர் மனதில் எழலாம் ..
ஞானத்தால்
தொழுவர் சில ஞானியர்
ஞானத்தால் தொழுவேன் உனை நானலேன்
ஞானத்தால் தொழுவார் தொழக்கண்டு
ஞானத்தால் உனை நானும் தொழுவனே!” என்பது
அப்பர் வாக்கு.
காமிக்ஸ் பற்றிய அறிவால்
யாம் இங்கு ஆசிரியரை பாராட்ட வரவில்லை .
காமிக்ஸ் பற்றி அறிந்த
நல்லோர் ஆசிரியரை பாராட்டுவது கண்டு அதன்மூலம் பெற்ற அறிவால் இங்கு யாம் ஆசிரியரை
பாராட்ட வந்ததாக அறிக .
நான்கு கோடி காமிக்ஸ்
வெளியிட்ட நாயகர் என்ற தலைப்பெடுத்து ஆசிரியர் பற்றி பேச இவ்விடம் வந்தேன் ..
நான்கு கோடியா ?
கணக்கில் ஏற்பட்டு
இருக்கும் இப்பிழை பேசுபவர் மூப்பினால் வந்ததா?
அல்லது கைப்பேசி
கால்குலேட்டர் ஆப்பினால் வந்ததா ?
என சிலர் எண்ணக்கூடும் .
எனது கணக்கு சரிதான் என
நிரூபிக்க கையோடு ஒரு பாட்டியை கூட்டி வந்திருக்கிறேன்..
பாட்டி என்றவுடன் ஆசிரியர்
அச்சமுற வேண்டாம்
இவர் அடுத்தவர் பையில்
கைவிடும் ஐரோப்பிய பாட்டி அல்ல
அனைவருக்கும் அறிமுகமான
அவ்வைப்பாட்டி .
சோழ மன்னன் ஒருவன் தனது அவைக்களப் புலவர்களை
அழைத்து, ‘நாளை பொழுது விடிவதற்குள்
நீங்கள் நாலு கோடி பாடல்கள் பாட வேண்டும்’ என்று ஆணையிட்டான்.
ஓர் இரவுக்குள் நாலு கோடி பாடல்களை எப்படிப்
பாடுவது என்று அவைக்களப் புலவர்கள் திகைத்தனர். அப்போது அங்கே ஒளவையார் வந்தார்; புலவர்களின்
கவலைக்கான காரணத்தைக் கேட்டு அறிந்தார். உடனே அவர் புலவர்களைப் பார்த்து, ‘இதற்காகவா திகைத்தீர்கள். கவலை வேண்டாம். இப்போதே நாலு கோடி பாடலைப்
பாடுகிறேன்; மன்னனிடம் சென்று அதைப் பாடுங்கள்’ என்று கூறிவிட்டு ஒரே ஒரு பாடலை மட்டும் பாடினார். ஒரு பாடல் எப்படி நாலு
கோடி பாடலுக்கு இணையானது ஆகும்? வியப்பாக இருக்கிறதா?
இதோ அந்த நாலு கோடி பாடலைப் பாருங்கள்.
மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று
மிதியாமை கோடி பெறும்; உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார் தம்மனையில் உண்ணாமை கோடி பெறும்; கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு கூடுதல் கோடி பெறும்; கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைநாக் கோடாமை கோடி பெறும். |
என்பதே அப்பாடல்.
இப்பாடலில் ஒவ்வொரு ஈரடியும் ஒரு கோடி
பாடலுக்கான உண்மையை உணர்த்துவதாக புரிந்துகொள்வது சுலபம் ..
இதற்கும் ஆசிரியர்க்கும் என்ன தொடர்பு ?
தமிழக வரலாற்றில் களப்பிரர் ஆண்ட காலத்தை
;;இருண்ட காலம் ‘’ என அழைப்பர்
.
லயன்முத்துவின் வரலாற்றிலும் அப்படிப்பட்ட
இருண்ட காலம் வரத்தான் செய்தது ..
களப்பிரர் ஆண்ட சமயம் தமிழகத்தில் என்ன நடந்தது
என்பதே தெரியவில்லை ..
அதே போல் 2010- 2012 வரை தமிழ் காமிக்ஸ்
உலகில் என்ன நடக்கிறது என்பதை பெரும்பாலோர் அறிந்திலர்...
2012 கம்பேக் –க்கு பிறகு இதழ்கள் சீராக
வெளிவரத் துவங்கின ..
கிரகணம் பீடித்த நிலையில் இருந்து கதிரவனாய்
லயன்முத்து பிரகாசிக்க துவங்கியது..
ஆயினும் பலருக்கு சந்தேகம் இருந்து கொண்டுதான்
இருந்தது ...
இவரால் இப்படி தொடர முடியுமா ?
புதிய தலைமுறை சவால்களை ஆசிரியரால் சந்திக்க
இயலுமா /
தமிழ் காமிக்ஸ் வானை சந்தேக மேகங்கள் சூழ்ந்து
இருந்தன..
இச்சூழ்நிலையில்தான் நெவர் பிபோர் ஸ்பெஷல்- ஐ
ஆசிரியர் வெளியிட்டார் .
வாசகர்கள் மத்தியில் அளவற்ற குதூகலத்தையும்
ஆசிரியர் மாட்டு பெரும்
நம்பிக்கையையும் தோற்றுவித்த NBS அக்காலகட்டத்தில் ஒரு கோடி காமிக்ஸ்
வெளியிட்டதற்கு சமமாகும்...
நிலைக்குமா இவ்வாழ்வு என்ற நெஞ்சின் கலக்கத்தை
குலைத்திட்ட என் பிஎஸ் கோடி பெறும்.
சந்தேக
மேகங்களை சண்ட மாருதமாய் வந்து NBS விரட்டியடித்தது என்றால் அது
மிகையான கூற்று அல்ல ...
ஒரு நிலையை அடைந்தபின் எதிர்பார்ப்புகளை
எதிர்கொள்வதும் அடைந்த நிலையை தக்க வைத்து கொள்வதும் எளிய விஷயமல்ல..
கடின உழைப்பினால் எதிர்பார்ப்புகளுக்கு ஈடு
கொடுத்தார் ஆசிரியர் .
.
லயன் மேக்னம் – வெளியிட்டார்
.
இச்சையுடன் எதிர்பார்த்தோம்;இருகரத்தில் ஏந்தி
களித்தோம்
லஜ்ஜையின்றி சொல்வேன் லயன் மேக்னம் கோடி
பெறும்...
பின்னர் நடைபெற்றதோ பெருமுயற்சி ....
தமிழ் காமிக்ஸ் வளர்ச்சியின் பாயிரம் என ஆயிரம்
ரூபாயில் வெளிவந்தது மின்னும் மரணம் .
பதிப்பக உலகின் ஜாம்பவான்கள் கண்களின்
புருவங்களை உயர்த்தியது ..
தின்னுமது இதயத்தை ; திரும்பி பார் பார்க்கும்
மின்னும் மரணம் மற்றுமோர் கோடி பெறும்..
தொடர்வதோ சொற்களில் அடக்க இயலா விந்தை......
உள்அகம் நறுந்தாது உறைப்ப மீதுஅழிந்து
கள்உக நடுங்கும் கழுநீர் போல ....
தன்னுள்ளே உள்ள தாதுக்கள் ஊறி இருத்தலால் மேலேயிருக்கும்
கட்டு அவிழ்ந்து தேன் சொரியும் கழுநீர் பூவை போல ஆகிவிட்டார் ஆசிரியர் ...
ஆசிரியர் உள்ளே எப்போதும் ஊறி கொண்டே இருக்கும்
சித்திரக்கதைகள் மீதான பிரேமம் பல
இக்கட்டுகளையும் அவிழ்த்து காமிக்ஸ் என்னும் தேன்தனை சொரிய செய்துகொண்டுதான்
இருக்கிறது .
இதற்கு சமீபத்திய உதாரணம் இதோ வெளிவரப்போகும்
ரத்தப்படலம் வண்ணப்பதிப்பு.
சத்தம் போட்டு சொல்வேன் சந்தோஷ பறையொலிக்க
இரத்தப்படலம் சத்தியமாய் கோடி பெறும் ....
ஆக நான்கு கோடி காமிக்ஸ் வெளியிட்ட நாயகன் என்ற
எமது தலைப்பு உங்களுக்கு விளங்கியிருக்கும் ..
ஆசிரியர் வெளியிட்ட மற்றவையெல்லாம் ? என்ற சிந்தனை
தோன்ற வேண்டுவதில்லை ...
நவரத்ன புதையலில் உயர்வென்ன / தாழ்வென்ன ?
தகுந்த காலத்தே செய்யப்பட்டவை என்பதாலும் சில
கூடுதல் சிறப்பம்சங்களாலும் இவை நான்கும் சுட்டி காட்டப்பட்டன ..
தை மாதம் நதி நீராடும் பாவை நோன்பு பாடல் ஒன்றை
சொல்லி உரையை நிறைவு
செய்கிறேன்
கழுத்து அமை கை வாங்காக் காதலர்ப் புல்ல,
விழுத் தகை பெறுக!” என வேண்டுதும்’ ..
...........................................................................
............................................................................
மழ ஈன்று
மல்லற் கேள் மன்னுக!”
எம் கழுத்தைச் சுற்றித் தழுவிய எம் காதலர் (கணவர்) எம்மைப்
பிரியாது இருக்க வேண்டும்.
...............................................................................
இந்த இளம் பருவத்தினராகவே இன்று இங்கு தைந் நீராடுவது போல
என்றும் நிலைபெற
வேண்டும்.”
ஆசிரியருக்கும்
வாசகர்களுக்கும் உள்ள இப்பந்தம் என்றும் பிரியாது இருக்கவேண்டும் .
மனதளவில்
இளமையுள்ளவராய் என்றும் ஆசிரியர் வெளியிடும் காமிக்ஸ் வாசித்து மகிழ்ந்து
இதுபோல்
எண்ணற்ற புத்தக வாசக சங்கம விழாக்கள் என்றென்றும்
நடைபெற வேண்டும் என
வேண்டி விடைபெறுகிறேன்
Subscribe to:
Posts (Atom)