Saturday, 28 July 2018

நான்கு கோடி காமிக்ஸ் வெளியிட்ட நாயகன்


[நான்கு கோடி காமிக்ஸ் வெளியிட்ட நாயகன் என்ற தலைப்பில் சென்ற வருட ஈரோடு புத்தக திருவிழாவில் எடிட்டரை பற்றி நான் பேச உத்தேசித்து இருந்த பொருளடக்கம் சிறிது மாறுதல்களுடன் ...இவ்வருடம் நான் கலந்து கொள்ள இயலாது என்பதால் ]

நண்பர்களுக்கு வணக்கம் !

காமிக்ஸ் வானின் நட்சத்திரங்களாகிய காமிரேடுகள்  நாற்காலியில் எதிரே வீற்று இருக்க மின்மினிபூச்சியாகிய யான் மேடையேறி பேசுவது என்பது  நகைமுரணே.

இங்கு நடைபெறும் விழாவின் கோலாகலங்கள் பூம்புகாரில் நடைபெற்ற இந்திர விழா வர்ணனைகளை நினைவூட்டுகின்றன ..

ஈரோடு விஜய் உள்ளிட்ட வரவேற்பு குழுவினர் நெடும் தொலைவில் இருந்து வரும் நண்பர்களை புன்னகை என்னும் நறுமணம் சுமந்து காமிக்ஸ் வாசகர்கள் அல்லாத பொது மாந்தர்கள் மத்தியில் நீந்தி வரவேற்பது
  அகில் உண விரித்த அம் மென் கூந்தல்
முகில்நுழை மதியத்து முரிகரும்
என்ற வரிகளை நினைவூட்டுகிறது .

நெடுநாள் பிரிவுக்கு பின் தலைவி அகில் நறுமணம் கமழும் கூந்தலுடன் மேகத்தில் நுழைந்த முழுமதி போல் நின்று தலைவனை வரவேற்கிறாளாம்.

ஆகஸ்ட் மாதம் காமிக்ஸ் ஏதுமில்லை என நோயுற்று இருக்கும் வாசகர்களின் நிலை அறிவோம் ..

இந்நிலைக்கு மருந்துதான் என்ன ?

அவள் தந்த நோய்க்கு அவளே மருந்து என்றார் வள்ளுவர் ..

  ’பிணிக்கு மருந்து பிறமன், அணியிழை
 தன்நோய்க்குத் தானே மருந்து.

என சொன்னார் ..

ஆகஸ்ட் மாத காமிக்ஸ் நோய்க்கு மருந்தாக மகோன்னத புகழுற்ற இரத்தப்படலம் இன்னும் சிறிது நேரத்தில் வெளியிடப்பட போகிறது ..
அதுசரி ..காமிக்சால் ஏற்பட்ட நோய்க்கு காமிக்ஸ்தானே மருந்தாக இருக்கமுடியும் . 


 விழா சிறப்புற நடைபெறுகிறது எனினும் அதன் நாயகனை பாராட்டவே இங்கு வந்தேன்..

முப்பது ஆண்டுகளுக்கு மேலாக காமிக்ஸ் மொழிபெயர்ப்பு மற்றும் அச்சு நுணுக்கங்கள் பற்றி அறிந்த ஆசிரியரை பாராட்ட இந்த மூடமதியாளனுக்கு என்ன தகுதி உள்ளது ?

ஷெனாய் வாத்திய கருவிக்கு பதிலாக சில்வண்டின் ரீங்காரம் இசையாகுமா என்ற கேள்வி இங்கிருக்கும் பலர் மனதில் எழலாம் ..

   ஞானத்தால் தொழுவர் சில ஞானியர்  
    ஞானத்தால் தொழுவேன் உனை நானலேன்                      
   ஞானத்தால் தொழுவார் தொழக்கண்டு                            
   ஞானத்தால் உனை நானும் தொழுவனே!”  என்பது அப்பர் வாக்கு.


காமிக்ஸ் பற்றிய அறிவால் யாம் இங்கு ஆசிரியரை பாராட்ட வரவில்லை .
காமிக்ஸ் பற்றி அறிந்த நல்லோர் ஆசிரியரை பாராட்டுவது கண்டு அதன்மூலம் பெற்ற அறிவால் இங்கு யாம் ஆசிரியரை பாராட்ட வந்ததாக அறிக . 

நான்கு கோடி காமிக்ஸ் வெளியிட்ட நாயகர் என்ற தலைப்பெடுத்து ஆசிரியர் பற்றி பேச இவ்விடம் வந்தேன் ..

நான்கு கோடியா ?

கணக்கில் ஏற்பட்டு இருக்கும் இப்பிழை பேசுபவர் மூப்பினால் வந்ததா?
அல்லது கைப்பேசி கால்குலேட்டர் ஆப்பினால் வந்ததா ?
என சிலர் எண்ணக்கூடும் .

எனது கணக்கு சரிதான் என நிரூபிக்க கையோடு ஒரு பாட்டியை கூட்டி வந்திருக்கிறேன்..

பாட்டி என்றவுடன் ஆசிரியர் அச்சமுற வேண்டாம்

இவர் அடுத்தவர் பையில் கைவிடும் ஐரோப்பிய பாட்டி அல்ல
அனைவருக்கும் அறிமுகமான அவ்வைப்பாட்டி .


சோழ மன்னன் ஒருவன் தனது அவைக்களப் புலவர்களை அழைத்து, ‘நாளை பொழுது விடிவதற்குள் நீங்கள் நாலு கோடி பாடல்கள் பாட வேண்டும்’ என்று ஆணையிட்டான்.

ஓர் இரவுக்குள் நாலு கோடி பாடல்களை எப்படிப் பாடுவது என்று அவைக்களப் புலவர்கள் திகைத்தனர். அப்போது அங்கே ஒளவையார் வந்தார்; புலவர்களின் கவலைக்கான காரணத்தைக் கேட்டு அறிந்தார். உடனே அவர் புலவர்களைப் பார்த்து, ‘இதற்காகவா திகைத்தீர்கள். கவலை வேண்டாம். இப்போதே நாலு கோடி பாடலைப் பாடுகிறேன்; மன்னனிடம் சென்று அதைப் பாடுங்கள்என்று கூறிவிட்டு ஒரே ஒரு பாடலை மட்டும் பாடினார். ஒரு பாடல் எப்படி நாலு கோடி பாடலுக்கு இணையானது ஆகும்? வியப்பாக இருக்கிறதா? இதோ அந்த நாலு கோடி பாடலைப் பாருங்கள்.

மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று 
மிதியாமை கோடி பெறும்;
 
உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார் தம்மனையில்
 
உண்ணாமை கோடி பெறும்;
 
கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு
 
கூடுதல் கோடி பெறும்;
 
கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைநாக்
 
கோடாமை கோடி பெறும்.


என்பதே அப்பாடல்.


இப்பாடலில் ஒவ்வொரு ஈரடியும் ஒரு கோடி பாடலுக்கான உண்மையை உணர்த்துவதாக புரிந்துகொள்வது சுலபம் ..

இதற்கும் ஆசிரியர்க்கும் என்ன தொடர்பு ?

தமிழக வரலாற்றில் களப்பிரர் ஆண்ட காலத்தை ;;இருண்ட காலம் ‘’ என அழைப்பர் 
.
லயன்முத்துவின் வரலாற்றிலும் அப்படிப்பட்ட இருண்ட காலம் வரத்தான் செய்தது ..

களப்பிரர் ஆண்ட சமயம் தமிழகத்தில் என்ன நடந்தது என்பதே தெரியவில்லை ..

அதே போல் 2010- 2012 வரை தமிழ் காமிக்ஸ் உலகில் என்ன நடக்கிறது என்பதை பெரும்பாலோர் அறிந்திலர்...

2012 கம்பேக் –க்கு பிறகு இதழ்கள் சீராக வெளிவரத் துவங்கின ..

கிரகணம் பீடித்த நிலையில் இருந்து கதிரவனாய் லயன்முத்து பிரகாசிக்க துவங்கியது..

ஆயினும் பலருக்கு சந்தேகம் இருந்து கொண்டுதான் இருந்தது ...

இவரால் இப்படி தொடர முடியுமா ?

புதிய தலைமுறை சவால்களை ஆசிரியரால் சந்திக்க இயலுமா /

தமிழ் காமிக்ஸ் வானை சந்தேக மேகங்கள் சூழ்ந்து இருந்தன..

இச்சூழ்நிலையில்தான் நெவர் பிபோர் ஸ்பெஷல்- ஐ ஆசிரியர் வெளியிட்டார் .

வாசகர்கள் மத்தியில் அளவற்ற குதூகலத்தையும் ஆசிரியர் மாட்டு பெரும் 

நம்பிக்கையையும் தோற்றுவித்த NBS அக்காலகட்டத்தில் ஒரு கோடி காமிக்ஸ்

வெளியிட்டதற்கு சமமாகும்...


  நிலைக்குமா இவ்வாழ்வு என்ற நெஞ்சின் கலக்கத்தை
  குலைத்திட்ட என் பிஎஸ் கோடி பெறும்.


 சந்தேக மேகங்களை சண்ட மாருதமாய் வந்து NBS விரட்டியடித்தது என்றால் அது மிகையான கூற்று அல்ல ...


ஒரு நிலையை அடைந்தபின் எதிர்பார்ப்புகளை எதிர்கொள்வதும் அடைந்த நிலையை தக்க வைத்து கொள்வதும் எளிய விஷயமல்ல..


கடின உழைப்பினால் எதிர்பார்ப்புகளுக்கு ஈடு கொடுத்தார் ஆசிரியர் .
.
லயன் மேக்னம் – வெளியிட்டார்
 .
இச்சையுடன் எதிர்பார்த்தோம்;இருகரத்தில் ஏந்தி களித்தோம்

லஜ்ஜையின்றி சொல்வேன் லயன் மேக்னம் கோடி பெறும்...

பின்னர் நடைபெற்றதோ பெருமுயற்சி ....

தமிழ் காமிக்ஸ் வளர்ச்சியின் பாயிரம் என ஆயிரம் ரூபாயில் வெளிவந்தது மின்னும் மரணம் .

பதிப்பக உலகின் ஜாம்பவான்கள் கண்களின் புருவங்களை உயர்த்தியது ..

தின்னுமது இதயத்தை ; திரும்பி பார் பார்க்கும்

மின்னும் மரணம் மற்றுமோர் கோடி பெறும்..

தொடர்வதோ சொற்களில் அடக்க இயலா விந்தை......


உள்அகம் நறுந்தாது உறைப்ப மீதுஅழிந்து

கள்உக நடுங்கும் கழுநீர் போல ....


தன்னுள்ளே உள்ள தாதுக்கள் ஊறி இருத்தலால் மேலேயிருக்கும் கட்டு அவிழ்ந்து தேன் சொரியும் கழுநீர் பூவை போல ஆகிவிட்டார் ஆசிரியர் ...

ஆசிரியர் உள்ளே எப்போதும் ஊறி கொண்டே இருக்கும் சித்திரக்கதைகள்  மீதான பிரேமம் பல இக்கட்டுகளையும் அவிழ்த்து காமிக்ஸ் என்னும் தேன்தனை சொரிய செய்துகொண்டுதான் இருக்கிறது .


இதற்கு சமீபத்திய உதாரணம் இதோ வெளிவரப்போகும் ரத்தப்படலம் வண்ணப்பதிப்பு.

சத்தம் போட்டு சொல்வேன் சந்தோஷ பறையொலிக்க

இரத்தப்படலம் சத்தியமாய் கோடி பெறும் ....

ஆக நான்கு கோடி காமிக்ஸ் வெளியிட்ட நாயகன் என்ற எமது தலைப்பு உங்களுக்கு விளங்கியிருக்கும் ..

ஆசிரியர் வெளியிட்ட மற்றவையெல்லாம் ? என்ற சிந்தனை தோன்ற வேண்டுவதில்லை ...
நவரத்ன புதையலில் உயர்வென்ன / தாழ்வென்ன ?

தகுந்த காலத்தே செய்யப்பட்டவை என்பதாலும் சில கூடுதல் சிறப்பம்சங்களாலும் இவை நான்கும் சுட்டி காட்டப்பட்டன ..

தை மாதம் நதி நீராடும் பாவை நோன்பு பாடல் ஒன்றை சொல்லி உரையை நிறைவு 

செய்கிறேன்

கழுத்து அமை கை வாங்காக் காதலர்ப் புல்ல,

விழுத் தகை பெறுக!என வேண்டுதும்’ ..

...........................................................................

............................................................................

 மழ ஈன்று மல்லற் கேள் மன்னுக!” 



எம் கழுத்தைச் சுற்றித் தழுவிய எம் காதலர் (கணவர்) எம்மைப் பிரியாது இருக்க வேண்டும். 

...............................................................................


இந்த இளம் பருவத்தினராகவே இன்று இங்கு தைந் நீராடுவது போல என்றும் நிலைபெற

 வேண்டும்.

ஆசிரியருக்கும் வாசகர்களுக்கும் உள்ள இப்பந்தம் என்றும் பிரியாது இருக்கவேண்டும் .

மனதளவில் இளமையுள்ளவராய் என்றும் ஆசிரியர் வெளியிடும் காமிக்ஸ் வாசித்து மகிழ்ந்து

இதுபோல் எண்ணற்ற  புத்தக வாசக சங்கம விழாக்கள் என்றென்றும் நடைபெற வேண்டும் என

        வேண்டி விடைபெறுகிறேன்   
   
            
    

Wednesday, 15 June 2016

MARCH

MARCH BOOK 1& 2 (OF MARCH TRILOGY)

AUTHOR…..JOHN LEWIS & ANDREW AYDIN

ARTIST………NATE POWELL

YEAR RELEASED…BOOK 1 ( 2013), BOOK2 (2015)

GENRE….MEMOIR,SEMI AUTOBIOGRAPHY

PUBLISHERS………TOP SHELF

நிற பேதம், இன பேதம் என்பன எல்லா நாடுகளிலும் ஏதாவது ஒரு பேரில் உலவி கொண்டுதான் இருக்கிறது.....
ஜார்ஜியா மாகாணத்தின் ஐந்தாவது மாவட்ட பிரதிநிதியாக 1986-ல் தேர்ந்தெடுக்கபட்டு இன்று வரை அப்பதவி வகிக்கும் ஜான் லூயிஸ் அமெரிக்க மத்திய , மாகாண அரசுகளுக்கு எதிரான தனது சிவில், மனித உரிமை போராட்ட பங்களிப்பு பற்றி, அப்போராட்டங்களை  பற்றி ஆண்ட்ரூ அய்டின் உதவியுடன் எழுதியுள்ள கிராபிக் நாவல்தான் இது........ 

ஆட்டோபயோகிராபி என்றவுடன் சற்று ஆயாசம் ஏற்படுத்தும் என்றுதானே நினைக்கிறீர்கள் ? உடனே முடிவை மாற்றி கொள்ளுங்கள்.....முதல் பாகத்தை ஒரே மூச்சில் படிக்க முடிந்தது....காமிக்ஸ் என்ற வடிவத்தின் மிக பெரிய சக்தி இது......(நூல் வடிவில் இல்லாது).....
முதல் பாகத்தில் ஜானின் இளமை பருவம்,நிற பேதம் காரணமாக தனி பள்ளி,மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் உடன் அறிமுகம் ,நாஷ்வில் கிராம மாணவர் இயக்கத்தில் பங்கெடுத்து வன்முறையில்லா முறையில் உணவு விடுதிகளில் வெள்ளையருடன் சம உரிமை கோருதல்
முழுக்க, முழுக்க காந்தீய கோட்பாடுகள் பின்பற்றியே போராட்டங்கள்....

பாகம் இரண்டில் நிறவெறி அதிகம் உள்ள தெற்கு நோக்கிய பஸ் பயணம், உயர் வெள்ளை அதிகாரிகளின் துவேஷம், காவல் துறையின் அத்து மீறிய பலப்பிரயோகம், சிறைவாசம். பல சகாக்களின் உயிர் இழப்பு, இயக்கத்தின் உள்ளே நிலவிய உட்பூசல்கள் என பல வரலாற்று சம்பவங்கள்   
இவை அனைத்தும் 1963-ல் நடைபெற்ற வாஷிங்டனை நோக்கிய வேலை,சமூக சமநீதி வேண்டி ஆறு பெருந்தலைவர்கள்(ஜானும் இதில் அடக்கம்) தலைமையில் நடத்த பெற்ற பேரணியை மையமாக கொண்டே எழுதப்பட்டுள்ளது.......................
கறுப்பினத்தவர்களால் நடத்தபெற்ற இவ்வியக்கத்தில் பல கலப்பின,கலப்பினமற்ற வெள்ளையர்களும் பங்கு பெற்றனர்................
சுயசரிதை காமிக்ஸ்தானே....சித்திரங்கள் எப்படியோ என நினைக்க வேண்டாம்....
EISNER,IGNATZ  அவார்டுகள் பெற்ற NATE POWELL –ன் ஓவியங்கள் உயிரூட்டமுள்ளவை...................................

அமெரிக்க மாணாக்கர்கள் மட்டுமின்றி உலக வரலாற்றில் ஆர்வமுள்ளவர்கள்,சர்வதேச மாணவர்கள் அனைவரும் இதை மிகவும் ரசிப்பார்கள் என்பதில் ஐயமில்லை................................  






















Tuesday, 2 February 2016

DESCENDER

DESCENDER……………………… TIN STARS

AUTHOR………….JEFF LEMIERE

ARTIST………….DUSTIN NGUYEN

PUBLISHER…..IMAGE…..

YEAR RELEASED………….SEPTEMBER 2015

தொலைவானதொரு எதிர்காலத்தில் ...........
ஒன்பது கிரகங்கள் அடங்கிய கூட்டமைப்பு.....UGC(UNITED GALACTIC COUNCIL)
UGC தலைமையகம் உள்ள இடம் PLANET NIYRATA
திடீரென ஒருநாள் ஒரு உபகிரகம் அளவுக்கு பெரிதான ரோபோக்கள்( இவை  பின்னர் HARVESTERS என அழைக்கபடுகின்றன) இந்த ஒன்பது கிரகங்களின் சுற்றுபாதையில் ஒரே நேரத்தில் தோன்றி பேரழிவை ஏற்படுத்துகின்றன.....
இந்த சம்பவத்துக்கு பின் பல விரும்பத்தகாத மாற்றங்கள் நிகழ்கின்றன...
 PLANET NIYRATA –உடன் பிற கிரகங்களுக்கு இருந்த சுமுக உறவு சீர்குலைகிறது.
இந்த அழிவிலிருந்து காப்பாற்றும் பொறுப்பிலிருந்து PLANET NIYRATA தவறிவிட்டதாக  ஏனைய கிரகங்கள் நினைக்கின்றன......
ரோபோக்கள் ஹார்வெஸ்டர்ஸ் மூலம் கட்டுபடுத்தபடலாம் என்ற அச்சம் காரணமாக அவை முற்றிலும் அழிக்கபடுகின்றன.......(ROBOTIC GENOCIDE)
ரோபோக்கள் எந்த வடிவில் இருப்பினும் அவற்றை அழிக்க ஸ்கை ஸ்காராப்பர்ஸ் எனும் கும்பல் அலைகிறது....இவற்றின் பின்னணியில் சில கிரகங்கள் இருக்கின்றன.

ஹார்வெஸ்டர்ஸ் தோன்றி பத்து வருடங்கள் கழித்து...........
DIRISHU 6 என்ற கிரகத்தின் துணைகோளில் கனிமசுரங்கம் பல அமைந்துள்ள குடியிருப்பு பகுதியில் TIM -21 என்ற குழந்தைகளுக்கான கம்பானியன் ரோபோ ஸ்லீபிங் மோடிலிருந்து கண் விழிக்கிறது......
பண்டிட் என அழைக்கப்படும் ஒரு ரோபோ நாயினை சரி செய்து கூட்டி செல்லும் டிம் குடியிருப்பு காலனியில் அனைவரும் மடிந்து விட்டதை உணர்ந்து வெளி உலகுடன் தொடர்பு கொள்ள முயல்கிறது.....
டிம் அனுப்பும் தகவலை பெறும்  PLANET NIYRATA –வின் ராணுவ பிரிவு கேப்டன் டெல்சா தலைமையில் ஒரு குழுவை DIRISHU 6 சுரங்க காலனியை நோக்கி அனுப்பி வைக்கிறது....இதில் டிம்மை வடிவமைத்த ரோபோ விஞ்ஞானி ஜின் குவானும் அடக்கம்.......
இடையே டிம்மின் மெமரி மெதுவாக புத்துணர்வு பெற துவங்க தான் மிசஸ் டாவர்ஸ் மகனான ஆன்டி டாவார்ஸ் க்கு கம்பானியன் ரோபோவாக வந்ததை நினைவு கொள்ளும் டிம் அங்கிருக்கும் கணினி மூலம் ஹார்வஸ்டர்ஸ் வருகை மற்றும் தனக்கிருக்கும் அபாயம் குறித்து அறிய நேருகிறது.......
டெல்சா குழுவுக்கு முன்னரே சுரங்க காலனியை வந்தடையும் ஸ்கை ஸ்காராப்பர்ஸ் கும்பல் ஒன்று டிம்மை வளைக்க முயல தப்பி பிழைத்த சுரங்கம் தோண்டும் டிரில்லர் ரோபோ ஒன்று இயக்கம் பெற்று டிம்முக்கு 
உதவுகிறது. எனினும் இதில் படுகாயமுறும் டிம்மினை தாமதமாக வரும் டெல்சா குழு காப்பாற்றி ஜின் குவான் மூலம் சரி செய்கின்றனர்.....
ஸ்கை ஸ்காராப்பர்ஸ் கும்பல் அனைவரும் மடிய டெல்சா PLANET NIYRATA நோக்கி தனது குழுவுடன் விரைகிறாள்.....
டெல்சா UGC  தலைவர் நகோகி –யின் மகள் என ஜின் குவான் அறியும் வேளையில் UGC –யின் அங்கமான  PLANET GNISH க்கு சொந்தமான விண்கலம் இவர்களை வழிமறித்து கைது செய்கிறது....
PLANET GNISH இப்போது PLANET NIYRATA வுடன் விரோத மனப்பான்மை கொண்டிருப்பதோடு ரோபோக்களை அழிப்பதில் மும்முரமாய் இருக்கும் கிரக குழுக்களில் ஒன்று..................................
இதன் மன்னன் S’NOK III ட்ரில்லர் ரோபோவை ரோபோக்கள் தங்களுக்குள் சண்டையிட்டு அழியும் உருக்கு குழிக்கு அனுப்பி விட்டு ஜின் குவானை சித்திரவதை செய்ய துவங்குகிறான்.....
எல்லாரும் இப்படி டிம் மேல் ஒரு கண் வைக்க காரணம் உண்டு......
டிம் சிப்பில் உள்ள டிஜிட்டல் இம்ப்ரின்ட்டும் (அதாவது ரோபோ டிஎன்ஏ மாதிரியான சமாச்சாரம்) ஹார்வஸ்டர்ஸ் உடைய டிஜிட்டல் இம்ப்ரின்ட்டும் ஒரே மாதிரி இருப்பதுதான்......
சித்திரவதை தாங்காது ஜின் குவான் ஒரு உண்மையை வெளியிடுகிறார்..
15 வருடங்களுக்கு முன் தனது குரு புரபசர் சாலமன் உடன் UGC –யின் மற்றுமோர் அங்கமான  PLANET OSTRAKON-க்கு சென்று இருந்தபோது தனது குருவின் உழைப்பை திருடி ரோபோக்களை வடிவமைத்ததாகவும் அது தனது அறிவில் பிறந்தது அல்ல எனவும் ஒப்பு கொள்கிறார்.....
அப்போது அதிரடியாக அங்கு நுழையும் HARDWIRE என்னும் ரகசிய ரோபோ காப்பு குழு   எதிர்க்க முயல்வோரை கொன்று மன்னன் S’NOK III-ஐ துப்பாக்கி முனையில் வைக்கிறது.......
அங்கு ட்ரில்லர் ரோபோ உருக்கு குழியில் வீழ்வதிலிருந்து தப்பிக்க மற்ற சண்டை ரோபோக்களுடன் போராடி கொண்டிருக்கிறது...
இங்கு HARDWIRE தலைமை ரோபோ வான PSIUS தனது மகனை அழைக்க TIM 21  போல் தோற்றமுடைய TIM ZZ உள்ளே நுழைய .....

////////// பாகம் ஒன்று நிறைவு பெறுகிறது/////////////////////////////////////////////////////////


………….JEFF LEMIERE இதில் படம் வரையவில்லை.......
ARTIST.DUSTIN NGUYEN –யின் வாட்டர் கலர் ஓவியங்கள் கண் கவர் அழகு....

கதை சுருக்கம் படிக்கும்போதே STAR WARS, ARTIFICIAL INTELLIGENCE படங்கள் ஞாபகம் வருகிறதல்லவா?....ஆயினும் கதையின் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை.........................
சுவாரஸ்யமான வாசிப்பு அனுபவம்................................................